குட்கா வழக்கில் காவலில் எடுத்து விசாரித்து வரும் மாதவராவை செங்குன்றத்திலுள்ள குடோனிற்கு அழைத்துச் சென்று சிபிஐ அதிகரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
குட்கா வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட பின்னர், விசாரணை சூடு பிடித்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன், இந்த வழக்கில் கைதான மாதவ்ராவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 15ஆம் தேதி வரை அவரை சிபிஐ காவலில் வைத்து விசாரணை நடத்த உள்ளனர்.
கடந்த இரண்டு நாள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பல அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு லஞ்சமாக கொடுத்த பணம் விவரங்கள் பற்றியும் பல திடுக்கிடும் தகவல்களை சிபிஐ விசாரணையில் அவர் கூறியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை 11 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து மாதவ்ராவை சுமார் 20க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் மூன்று கார்களில் செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோனுக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து விசாரணை செய்ய உள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குட்கா வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட பின்னர் கடந்த 5 ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 18 பேர்களின் வீடு மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் அதிரடியாக சிபிஐ சோதனை செய்தனர்.
சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, பெங்களூர், பாண்டிச்சேரி, குண்டூர், மும்பை ஆகிய பகுதிகளில் உள்ள 35 இடங்களில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டது. இதையடுத்து விசாரணை முடிவில் குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ், மத்திய கலால் வரித்துறை அதிகாரி என்.கே.பாண்டியன் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன் ஆகியோரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.