அதிமுக சட்ட விதிகள் திருத்தத்தை ரத்து செய்யக்கோரும் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அதிமுக சட்ட விதிகளில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி, தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கே.சி பழனிசாமியின் மனு குறித்து, 4 வாரத்திற்குள் விசாரணை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய கே.சி.பழனிசாமி, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோர், தங்கள் தரப்பு வாதங்களை 3 வாரத்திற்குள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்ட 4 வாரத்திற்குள் கே.சி.பழனிசாமி மனு மீது தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.