ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 40,707 வாக்கு வித்தியாசத்தில் டிடிவி தினகரன் அபார வெற்றி

by Isaivaani, Dec 24, 2017, 17:13 PM IST

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கிய டிடிவி தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் தேர்வாகிறார்.

முன்னாள் முதல்வரும், முன்னாள் ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜெயலலிதா மறைந்த பிறகு, காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதில் பெரும் இழுபறி ஏற்பட்டது. பணப்பட்டுவாடா காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், கடந்த 21ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளராக மதுசூதனன், திமுக வேட்பாளராக மருதுகணேஷ், நாம் தழிழர், பாஜக மற்றும் சுயேச்சை வேட்பாளராக டிடிவி தினகரன் உள்பட 52 பேர் போட்டியில் களம் இறங்கினர்.

இந்த தேர்தலில், 77 சதவீதம் வாக்குபதிவாகி இருந்தது. இந்நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில், முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. தொடர்ந்து இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் ஆரம்பம் முதலே டிடிவி தினகரன் முன்னிலையில் இருந்து வந்தார். இவரை தொடரந்து மதுசூதனனும், மருதுகணேஷ் ஆகியோர் உள்ளனர்.

டிடிவி தினகரன் மற்றும் மதுசூதனன் தவிர மற்றவர்கள் டெப்பாசிட்டை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், 19 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவில் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று, 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

புதிய அவதாரம் எடுத்துள்ள டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர். இந்த வெற்றியின் மூலம், ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் தேர்வாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 40,707 வாக்கு வித்தியாசத்தில் டிடிவி தினகரன் அபார வெற்றி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை