அயனவாரத்தில் மாற்றுத் திறனாளி சிறுமி பலாத்காரம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி, அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குடியிருப்பில் வேலை செய்த லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 17 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி 17 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் 17 பேரும் ஒரு வருடத்திற்கு ஜாமின் பெற முடியாது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு எதிராக கடந்த வாரம் 300 பக்க குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ஊடகங்கள் பெரிதுபடுத்திவிட்டதாலும், மாநில போலீசார் அவசர அவசரமாக விசாரணை நடத்துவதாலும் நியாயமான விசாரணை நடக்காது எனக் கூறி, வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, அயனாவரம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.