இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள டிராஃபோர்ட் ஷாப்பிங் மாலில், 50 அடி உயரத்துக்கு ஒரு குட்டி ராட்சத சூரியனை உருவாக்கி காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்த ஆரஞ்சு நிற ஓளிப் பந்தை உருவாக்க 12 வாரங்கள் கடின உழைப்பை கொட்டியுள்ளனர். சுமார் 12,000 லைட் பல்புகளின் ஒளி வீசும் தன்மையை இந்த குட்டி சூரியன் வெளிப்படுத்தி வருகிறது.
இந்த புதிய முயற்சியின் மூலம் ஷாப்பிங் மாலுக்கு வருகை தருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இயல்பாகவே இங்கிலாந்து வாழ் மக்களுக்கு சூரிய வெப்பத்தின் மீது அலாதி பிரியம் உள்ளது. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், ஐந்தில், நான்கு பேருக்கு சூரிய வெப்பத்தின் மீதுள்ள காதல் தெளிவாகியுள்ளது.
இந்த பிரம்மாண்ட மாலில், சுமார் 1000 பேர் சூரிய வெப்பத்தை அனுபவிக்க முடியுமாம். அங்கு தற்போது, குளிர்காலம் என்பதால், இதமான சூழலுக்காக இந்த ஷாப்பிங் மாலுக்கு மக்கள் வருகை அமோகமாகியுள்ளது.
இங்கிலாந்து வாசிகளுக்கு இனி பருவ மழை காலத்திலும், கடும் குளிர் காலத்திலும் சூரிய ஒளியின் இதமான வெப்பம் இங்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
மேலும், 11 நாடுகளில் உள்ள ஷாப்பிங் மாலுக்கும் இந்த குட்டி சூரியன் பரிசோதனை மற்றும் அப்பகுதி மக்களின் அபிமானத்தை பெற சுற்றுலா செல்லப்போகிறதாம். குளிர் பிரதேச நாடுகள் மற்றும் அங்குள்ள சொகுசு ஹோட்டல்களில் இதேபோன்ற குட்டி சூரியன்களை வடிவமைக்கும் திட்டம் எதிர்காலத்தில் நிகழும் என்றும் இதனை வடிவமைத்தவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
எதுவாக இருந்தாலும், இயற்கையாய் தோன்றும் சூரிய வெப்பத்தின் ஆற்றல் மற்றும் சக்திகளின் அருகில் கூட இவை வர முடியாது என்பதே நிதர்சனம்!