தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு அநேக இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்று மண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி இலங்கை முதல் தெற்கு கர்நாடகா கடல் வரை நீடிக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், அடுத்த இரு தினங்களுக்கு தென் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலசந்திரன், சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். குமரி, தெற்கு கேரளா லட்சத்தீவு பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் அவர் கூறினார். எனவே, தமிழக மீனவர்கள் நாளை மாலை வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.