ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகை விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மற்றும் காவிரி கடைமடை பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓஎன்ஜிசி வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று டெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்தாக உள்ளது.
இது காவிரி டெல்டா பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகையில் விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி - தனபாலன் தலைமையில் நடந்த போராட்டத்தில் விவசாயிகள் முகத்தில் பிரதமர் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரது புகைப்படங்களை முகமூடிகளாக அணிந்து கொண்டு கழுத்தை இறுக்கி கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தின்போது வேளாண் மண்ணை வேதாந்தம் நிறுவனத்திடம் விற்க கூடாது என்றும், மீறி கடைமடை பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க முயற்சி மேற்கொண்டால் மத்திய அரசை கண்டித்து காவிரி விவசாயிகள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.