ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் மிஸ்ராவின் மனைவிக்கு அல்வா, மல்லிகைப் பூ அனுப்ப முயன்ற 7 பேரை விழுப்புரம் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஓரினச்சேர்க்கைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டதனை தொடர்ந்து, திருமண பந்தத்தினை கடந்து வேறு ஒருவருடன் உறவு வைத்துக்கொள்வதென்பது கிரிமினல் குற்றமில்லை என கடந்த சில தினங்களுக்கு முன்னதாக உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
அதேபோல், சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைய அனுமதி அளித்து தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த முக்கிய தீர்ப்புகள் மீதான எதிர்ப்பு, ஆதரவு, கண்டனம், விமர்சனங்கள் வந்து கொண்டே உள்ளன. சமூக வலைதளங்களில் இந்த தீர்ப்புகள் குறித்து மீம்ஸ் போடப்படுகின்றன.
இந்நிலையில், திருமணத்தை தாண்டிய தகாத உறவு குற்றமில்லை என தீர்ப்பு வழங்கிய ஓய்வு பெற்ற நீதிபதி தீபக் மிஸ்ராவின் மனைவிக்கு அல்வா, மல்லிகைப் பூ அனுப்ப இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் முயன்றனர்.
அவற்றை பார்சல் செய்து விழுப்புரம் தபால் நிலையத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, 7 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பார்சலை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரிடம் விழுப்புரம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.