2008ம் ஆண்டு இயற்றப்பட்ட தொழிலக வேலைவாய்ப்பு சட்டத்தை அமல்படுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
பயிற்சி மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் என்ற பெயரில் குறைந்த ஊதியத்துக்கு தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதைத் தடுக்க, கடந்த 2008ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த தொழிலக வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் உரிய விதிகளை உருவாக்கி அமல்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தொழிலாளர்கள் நலச் சட்டத்தில் மத்திய அரசு சில சீர்திருத்தங்களை கொண்டு வர உள்ளதால், அதன்பின், தொழிலக வேலைவாய்ப்பு சட்டத்தை அமல்படுத்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்த சட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும், அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.