கருணாஸை கைது செய்ய நெல்லை போலீசார் காத்திருக்கும் சூழலில், அவர் உடல்நலக் குறைவு காரணமாக வடபழனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில், செப்டம்பர் 16ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கருணாஸ் முதலமைச்சர், காவல்துறை அதிகாரி குறித்து அவதூறாக பேசிய வீடியோ வைரலானது. இதனை தொடர்ந்து எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எம்.எல்.ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டார்.
தற்போது நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த கருணாஸ், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். இந்நிலையில், சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் இல்லத்திற்கு திடீரென வந்த நெல்லை போலீசார், அவரை வீடு முழுக்க தேடினர்.
கடந்த ஆண்டு புலித்தேவன் பிறந்தநாளன்று மோதலில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நெல்லை போலீசார் கருணாஸை கைது செய் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், எம்.எல்.ஏ கருணாஸ் உடல்நலக் குறைவு காரணமாக வடபழனியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாஸுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜாமின் நிபந்தனையின்படி திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் கையெழுத்திட வரும் கருணாஸை கைது செய்ய நெல்லை போலீசார் காத்திருக்கின்றனர்.