தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு வங்க கடல் இலங்கையொட்டியுள்ள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சூழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்கள் அக். 5ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும். ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும். வரும் 5ஆம் தேதி தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும்." என்றார்.
"மேலும், அது வரும் 6 மற்றும் 7ஆம் தேதி வலுப்பெற்று வடமேற்கு அரபிக் கடல் பகுதியில் புயலாக உருவாகும் சூழல் உள்ளது. எனவே, அக் 6,7,8 ஆகிய தேதிகளில் குமரி கடல், லட்சத்தீவு, தெற்கு கேரளா,தென்கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்ல வேண்டாம். அத்துடன், ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் வரும் 5ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும்." என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறினார்.