ஸ்டெர்லைட்க்கு வழங்கப்பட்ட நிலத்தை அரசு திரும்ப பெற இடைக்கால தடை

by Manjula, Oct 3, 2018, 14:52 PM IST

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. இதையடுத்து பொதுமக்களின் உணர்வுகளுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பு அளிக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட தமிழக அரசு  உத்தரவிட்டது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்  வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கான (2வது யூனிட்) நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை சிப்காட் நிர்வாகம் ரத்து செய்தது. 342 ஏக்கர் சிப்காட் நிலம் ஒதுக்கீடு செய்தது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் நிலத்திற்காக ஸ்டெர்லைட் ஆலையிடம் இருந்து பெறப்பட்ட பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும் சிப்காட் கூறியுள்ளதை தொடந்து  சிப்காட் மேலாளர் ரத்து செய்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் பொதுமேலாளர் சத்தியப்பிரியா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் இரண்டாவது அலகுக்காக 342ஏக்கர் நிலத்தை 99ஆண்டுக் குத்தகைக்குப் பெற்று சிப்காட்டுடன் உடன்பாடு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலம் 2005, 2006, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டு அதற்கான பணத்தையும் சிப்காட்டுக்கு வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிப்காட் மேலாளர் கடந்த மே 29ஆம் தேதி குத்தகையை ரத்து செய்துள்ளதைக் குறிப்பிட்டு, குத்தகையை ரத்து செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். குத்தகையை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வழக்கறிஞர் எந்த முன்னறிவிப்பும் இன்றிக் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.மக்களின் மிகப்பெரிய போராட்டத்தையடுத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவும் இது அரசின் முடிவு என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காக எல்லா ஆலைகளையும் மூட முடியுமா என நீதிபதி பார்த்திபன் கேள்வி எழுப்பினார். நிலக் குத்தகையை ரத்து செய்ய அரசியல் ரீதியாக முடிவெடுக்கப்பட்டதா? சட்ட ரீதியாக முடிவெடுக்கப்பட்டதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

குத்தகையை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், இந்த மனுவுக்குத் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

You'r reading ஸ்டெர்லைட்க்கு வழங்கப்பட்ட நிலத்தை அரசு திரும்ப பெற இடைக்கால தடை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை