மருத்துவம் சார் படிப்புகளுக்கு அடுத்த ஆண்டு முதல் ஒரே கலந்தாய்வு நடத்த மருத்துவக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், நர்சிங், முதுநிலை மருத்துவம், முதுநிலை மருத்துவ டிப்ளோமா, நர்சிங், பாராமெடிக்கல் படிப்புகள், 9 மருத்துவ தொழில்நுட்பங்களுக்கான துணை மருத்துவ படிப்புகள், சான்றிதழ் படிப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும், தமிழக மருத்துவக்கல்வி இயக்ககம் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்தி வருகிறது.
அடுத்த ஆண்டு முதல் மருத்துவ படிப்புகளுக்கு தனியாகவும், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு ஒன்றாகவும் கலந்தாய்வு நடத்த மருத்துவக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, அதிகாரிகள் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு முன்னர் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இன்ஜினியரிங் சேர்ந்த மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்று அவர்களுக்கு சீட் கிடைத்தால், குறிப்பிட்ட இன்ஜினியரிங் இடம் காலியாக இருக்கிறது. 2017ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த 1,000 மாணவர்கள் மருத்துவம் படிக்க வந்துவிட்டதால் அந்த இடங்கள் காலியானது.
முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்கும் வரை, இன்ஜினியரிங் கலந்தாய்வை தொடங்குவதற்கான தேதியை தள்ளிப்போட வேண்டிய சூழல் உள்ளது. அதனால் வரும் கல்வியாண்டு முதல் மருத்துவக் கலந்தாய்வை முதலில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அதன்படி உரிய தேர்வு முடிவுகள் வெளியான சில நாட்களுக்குள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்குள் முதல், இரண்டாம்கட்ட மருத்துவக்கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும்.
முதுநிலை மருத்துவம், முதுநிலை மருத்துவ டிப்ளோமா படிப்புகளுக்கு அதற்கான தேர்வு முடிவுகளுக்கேற்ப தனி கலந்தாய்வு நடத்தப்படும். அதைத்தொடர்ந்து, கால்நடை மருத்துவம், இன்ஜினியரிங் உள்ளிட்ட பிற முக்கிய படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிந்ததும் அல்லது அந்த படிப்புகளுக்கான கலந்தாய்வு கால அட்டவணைக்கேற்ப, நர்சிங் உள்ளிட்ட பிற மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு ஒரே கலந்தாய்வு நடைபெறும்.
ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. பிளஸ்2 படிப்பு தகுதியாக உள்ள பிற படிப்புகளுக்கும் ஒரே பிரிவாகவும், டிப்ளோமா, சான்றிதழ் படிப்புகளுக்கு ஒரு பிரிவாகவும் ஒரே விண்ணப்பத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதன்மூலம் மருத்துவ கல்வி இயக்கக ஊழியர்களுக்கான வேலைப்பளுவும் குறையும்.
இதனால், குறிப்பிட்ட படிப்பில் சேர விரும்பும் மாணவர், அந்த படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துவிட்டு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது” என்று கூறினர்.