எம்.எல்.ஏ கருணாஸை கைது செய்யும் எண்ணம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருவாடனை தொகுதி MLA கருணாஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "கடந்த 2017ம் ஆண்டு நெல்லை மாவட்டம் நெற்கட்டும் சேவலில் பூலித்தேவர் நினைவிடத்தில் என்னுடன் வந்தவர்களுக்கும் தமிழ்நாடு தேவர் பேரவையை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது."
"அந்த தகராறு தொடர்பாக நெல்லை மாவட்டம் புளியங்குடி காவல் நிலையத்தில் 1-9-2017ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் என்னை போலீசார் கைது செய்யும் நோக்கத்தில் உள்ளனர். எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என கருணாஸ் கூறி இருந்தார்.
அந்த மனு உயர் நீ்திமன்ற மதுரை கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பாக ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராவதற்காக கால அவகாசம் கோரினார்.
குறுக்கிட்ட கருணாஸ் தரப்பு வழக்கறிஞர், கருணாஸின் சென்னை வீட்டு முன்பாக காவல் துறையினர் அவரை கைது செய்யும் எண்ணத்தில் முகாமிட்டு உள்ளனர். இந்த முன் ஜாமீன் மனுவின் விசாரனை முடியும் வரை கருணாஸை கைது செய்வதற்கு இடைக்கால தடை உத்தரவு அளிக்கலாம்" என வாதிட்டார்.
அப்போது நீதிபதி, அரசு வழக்கறிஞரிடம் கருணாஸை கைது செய்யும் எண்ணம் உள்ளதா எனக் கேட்டார். மூன்று நாட்கள் கைது செய்யும் எண்ணம் இல்லை என அரசு வழக்கறிஞர் திட்டவட்டமாக கூறினார். இதையடுத்து நீதிபதி, மூன்று நாட்களுக்கு கருணாஸை கைது செய்ய மாட்டார்கள் எனக்கூறி முன் ஜாமீன் மனு மீதான விசாரனையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.