இவர்கள் வாயை திறந்தால் எந்த அளவுக்கு கேவலமாக இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொண்டார்கள். அதனால் தான் அம்மா இவர்களை பேசாமல் வைத்திருந்தார்கள் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் காலியானதாக அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை தோற்கடித்து, சுயேட்சையாக நின்று டிடிவி தினகரன் அபார வெற்றிபெற்றார்.
இதனையடுத்து இன்று டிடிவி தினகரன் சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அப்போது தினகரன் ஆதரவாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ’’அப்படி என்ன பயமோ தெரியவில்லை. நாங்கள் வருகிறோம் என்று தெரிந்ததும் எங்களுக்கு வழிவிட்டு கோட்டையை விட்டு எல்லோரும் சென்றுவிட்டார்கள். கோட்டையே காலியாகிவிட்டது.
அமைச்சர்களை சும்மாவா அம்மா பேசாமல் வைத்திருந்தார்கள். இவர்கள் வாயை திறந்தால் எந்த அளவுக்கு கேவலமாக இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொண்டார்கள். முன்னுக்கு பின் முரணான செய்தியை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
தகுதி நீக்கம் வழக்கில் விரைவில் தீர்ப்பு வந்தால் எங்களூக்கும் நல்லது. மக்களுக்கும் நல்லது. தொகுதி பக்கம் நாங்கள் செல்லமுடியவில்லை. தொகுதி வளர்ச்சி பணிகளை நாங்கள் பார்க்க முடியவில்லை. அதிகாரிகளும் எங்களை தொடர்பு கொள்வதில்லை. நாங்கள் எம்.எல்.ஏ.வா இல்லையா என்பது எங்களுக்கே தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.