தமிழக மக்களுக்கு விரைவில் பொங்கல் பரிசு: முதல்வர் அறிவிப்பு

by Isaivaani, Dec 29, 2017, 16:48 PM IST

சென்னை: தமிழக மக்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசை பொதுமக்களுக்கு விரைவில் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில், தை முதல் நாளை பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது. விவசாயிகள், உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் திருநாளை ஆண்டுதோறும் மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் பொது மக்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அதேபோல், வரும் பொங்கலுக்கும் பரிசு தொகுப்பினை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழர் பண்டிகை பொங்கல் திருநாள், அறுவடைத் திருநாளாகவும், உலக மக்களுக்கு உணவமிக்கும் உழவர்களைப் போற்றிடும் திருநாளாகவும், விவசாயிகள் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நன்நாளாகவும் விளங்குகிறது.

பொங்கல் திருநாளை தமிழக மக்கள் சிறப்பாகவும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டை உடைய குடும்பங்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு, பொங்கல் திருநாளுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பினால், 1 கோடியே 84 லட்சம் குடும்பத்தினர் பயன்பெறுவர். இதன்மூலம், தமிழ்நாடு அரசுக்கு சுமார் ரூ.210 கோடி செலவு ஏற்படும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் மேற்படி பொங்கல் பரிசுத் தொகுப்பினைப் பெற்று பொங்கல் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

You'r reading தமிழக மக்களுக்கு விரைவில் பொங்கல் பரிசு: முதல்வர் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை