நியூட்ரினோ திட்டத்திற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், இதுவரை அனுமதி வழங்கவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்துவதற்கு அனுமதியளித்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கின் இன்றைய விசாரணையின் போது, தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வ பதில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நியூட்ரினோ திட்டத்திற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை அனுமதி வழங்கவில்லை என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கோரி, சம்பந்தப்பட்ட நிறுவனம் மனு அளித்திருந்ததாகவும், அந்த மனுவை அரசு திருப்பி அனுப்பிவிட்டதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. நியூட்ரினோ ஆய்வகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட பகுதிகளில், கடந்த ஏப்ரல் மாதம் அரசு ஆய்வு நடத்தியதாகவும், அங்கு எந்த கட்டுமானப் பணிகளும் நடைபெறவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.