தமிழகத்தில், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச சென்ற மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறிதது த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் சுமார் 400 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என்பதால் மீனவக் குடும்பங்கள் சோகத்தில் முழ்கியுள்ளனர்.
காணாமல் போன மீனவர்கள் எப்போது திரும்பி வருவார்கள் என்ற ஏக்கத்துடன் குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள். மத்திய மாநில அரசுகள் நவீன தொழில் நுட்பத்துடன் 24 மணி நேர தீவிர தேடுதல் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு அனைத்து மீனவர்களையும் பத்திரமாக மீட்டு, அவர்களின் படகுகளையும் கண்டுபிடித்து கொண்டுவர வேண்டும். தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கும், அவர்களின் பாதுகாப்புக்கும் இன்னும் அதிக அக்கறை கொண்டு நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் மீனவர்களின் பாதுகாப்பான மீன்பிடித்தொழிலுக்கு 24 மணி நேர பணிகளை துரிதமாக தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.