நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார். மதுரையில், நீர்நிலைகள் மற்றும் நீர்வழி பாதைகளில் உள்ள தற்காலிக, நிரந்தர கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியிருந்தார்.
ஏற்கனவே, இந்த மனு விசாரணைக்கு வந்த போது, "மதுரை,தேனி,திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் அக்டோபர் 11 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர்,பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் தலைமையில் நீர்வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 5 மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகி, விளக்கம் அளித்தனர். இதனை பதிவு செய்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால், அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் அறவே இல்லாமல் போய்விடும் என்று தெரிவித்தனர்.
"எவ்வளவு பெரிய கட்டடமாக இருந்தாலும் ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை தயவு தாட்சண்யம் இன்றி அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் வரும் 26-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.