டி-சீரிஸின் நிறுவனரும், பாலிவுட் தயாரிப்பாளருமான குல்ஷன் குமாரின் பயோபிக் ‘மொகுல்’ என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க திட்டமிடப்பட்டது.
ஆமீர் கான் கதாநாயகனாக நடித்து அவரே தயாரிக்க இருந்த இந்த படத்தை சுபாஷ் கபூர் இயக்க இருந்தார். இந்நிலையில், திடீரென ’மொகுல்’ புராஜெக்டில் இருந்து விலகுவதாக ஆமீர் கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் கூட்டாக அறிவித்துள்ளனர்.
சுபாஷ் கபூர் மீது கீதா தியாகி என்ற நடிகை பாலியல் புகார் கூறியிருந்தார். இதனை கருத்தில் கொண்டே ஆமீர்கான் புதிய படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. எனினும், சுபாஷ் கபூரின் பெயரை குறிப்பிடாமல் தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆமீர்கான், “இரண்டு வாரங்களுக்கு முன்னர் மீடூ விவகாரம் பெரிதாக வெடித்தது. இந்த விவகாரத்தில் சிக்கிய ஒருவர் எங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.
அவர் மீதான புகார் குறித்து சட்ட ரீதியான விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. நாங்கள் புலனாய்வு அமைப்பு இல்லை என்றாலும், புகாரின் அடிப்படையில் இந்த படத்தில் இருந்து நாங்கள் விலகுகிறோம். எந்த வகையிலான பாலியல் தொல்லைகளையும் ஆமீர் கான் பட நிறுவனம் சகித்துக்கொள்ளாது. ” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆமீர் கானுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருந்த டி-சீரிஸ் நிறுவனம், ‘மொகுல்’ புராஜெக்டில் இருந்து சுபாஷ் கபூரை அதிரடியாக நீக்கியுள்ளது. இது தொடர்பான கேள்விகளுக்கு, “ஆமீர்கானின் முடிவை ஏற்றுக்கொள்கிறேன். உண்மை விரைவில் வெளியே வரும்” என சுபாஷ் கபூர் பதில் அளித்துள்ளார்.