மதுரை சோழவந்தான் அருகே நூற்றாண்டுகள் பழமைவாய்ந்ததாகக் கூறப்படும் கோவிலில் இருந்து 4 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் ஸ்ரீ குருபகவான் சன்னதி பழமைவாய்ந்ததும் புகழ்பெற்றதும் ஆகும். அதிகாலை வழக்கம்போல் கோவிலை திறந்த அர்ச்சகர், அங்கு வல்லப பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, சீனிவாசர் ஆகிய நான்கு ஐம்பொன் சிலைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் கோவிலுக்கு வந்து விசாரணையில் இறங்கியுள்ளனர்.
அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில் நள்ளிரவு 12.30 மணியளவில் முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் சிலைகளை திருடுவது தெரியவந்துள்ளது.
களவுபோன 4 சிலைகளும் பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்தவை என்றும் பல கோடி ரூபாய் மதிப்பிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சிலை கடத்தல் குற்றத்தில் பலர் பிடிபட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.