முதல்வர் பழனிசாமி மீது டெண்டர் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு உள்ள நிலையில் அமைச்சரின் உறவினர் வீட்டில் ஐடி ரெய்டு நடந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உணவுத்துறை அமைச்சர் காமராஜின் சொந்த ஊரான மன்னார்குடியில் உள்ள அவரது உறவினரின் வீடு அலுவலகம் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜின் மூத்த சகோதரர் நடனசிகாமணி. இவருடைய சம்பந்தி மனோகரன் என்பவர் மன்னார்குடியைச் சேர்ந்தவர். மனோகர், இதற்கு முன்பு கூட்டுறவு சங்கதலைவராக இருந்துள்ளார். மேலும், கடந்த 10 ஆண்டுகளாக அரசு ஒப்பந்ததாரராகவும் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை மனோகரனுக்குச் சொந்தமான வீடு, அலுவலகம், பெட்ரோல் பங்க், கல்குவாரி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், இதுவரையில் வருமான வரித்துறையினர் எந்தவித ஆவணங்களையும் மனோகரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவரவில்லை. இது தொடர்பான முழுமையான விபரங்கள் இன்று மாலை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரிஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.