மனிதநேயமின்றி தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிப்பதா?: இலங்கை அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

MKStalin condemns Sri Lanka government to get fine from fishermen

by Isaivaani, Oct 16, 2018, 22:39 PM IST

மனிதநேயமின்றி எல்லைத்தாண்டியதாக கூறி தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதித்துள்ள இலங்கை அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடற்படை இந்திய மீனவர்களுக்கு தலா 60 லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று மாதம் சிறை தண்டனையும் விதித்து இலங்கை கல்பிட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்திலுள்ள தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் எட்டுப் பேரை கடந்த ஆகஸ்ட் 18-ந்தேதி இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்த வழக்கில்தான் இப்படியொரு அபாண்டமான தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.

நட்பு நாடு என்று கூறிக்கொண்டே மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மீது நாசகரமான தாக்குதல் நடத்தி முதுகில் குத்தும் இலங்கை அரசின் போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டு வருவது ஒருபுறமிருக்க, இலங்கை அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின்படி, ஒவ்வொரு மீனவருக்கும் 60 லட்சம் ரூபாய் அபராதம் என்பது அடிப்படை மனித உரிமைகளை மீறும் மனித நேய மற்றதும் அநியாயமானதுமான தீர்ப்பாகும்.

இதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும் எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இப்படியொரு கொடுமையான புதிய சட்டம் வந்த போதே, தி.மு.க.வின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இந்த சட்டத்தை திரும்பப் பெற இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று கூறியிருந்தேன்.

ஆனால் அது பற்றியெல்லாம் வழக்கம் போல் கிஞ்சிற்றும் கவலைப்படாத மத்திய பா.ஜ.க. அரசு, தமிழக மீனவர்களின் நலனில் அக்கறை காட்டாமல் அறவே ஒதுக்கி வைத்துவிட்டது. அ.தி.மு.க அரசும் மத்திய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்காமல் தூங்கி விட்டது.

இதனால் கடலுக்குள் செல்லும் மீனவர்கள் கண்ணீர் சிந்தும் நிலை உருவாகி, அவர்களின் குடும்பங்கள் எல்லாம் வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. டீசல் விலை உயர்வு, இலங்கைக் கடற்படைத்தொல்லை, படகுகள் பறிமுதல், இலங்கை அரசின் லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் போன்ற பன்முனைத் தாக்குதலில் சிக்கி தமிழக மீனவர்களின் வாழ்க்கை அநியாயமாகப் பாழ்படுத்தப்படுகிறது.

ஆகவே, மத்திய அரசு இனிமேலும் பொறுமையாக இருக்காமல் இலங்கை அரசுடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மனித நேயம் சிறிதுமின்றி இந்திய மீனவர்கள் மீது அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு அறிவுரை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You'r reading மனிதநேயமின்றி தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிப்பதா?: இலங்கை அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை