மணல் கடத்தலை தடுத்த வட்டாட்சியர் மீது லஞ்ச வழக்கு தொடர்ந்த அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் வட்டாட்சியராக பணியாற்றிய பாலகிருஷ்ணன், மணல் கடத்தலுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்து, லாரிகளை பறிமுதல் செய்து, அபராதங்களை விதித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம், ஒரு லாரியை பறிமுதல் செய்த போது, அதை விடுவிக்க கோரி சின்னதம்பி என்பவர் தொலைப்பேசி மூலம் வட்டாட்சியரிடம் கூறியுள்ளார்.
அந்த லாரி நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு தொடர்புடையது எனவும் அந்த நபர் கூறியுள்ளார். ஆனால், அந்த லாரியை விடுவிக்க மறுத்து, சார்பு ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பி, அபராதம் விதிக்கப்பட்டது.
வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த போது, சின்னதம்பி, தன் கையில் ஏதோ திணித்து சென்றதாகவும், அதை பார்ப்பதற்குள், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தன்னை லஞ்ச வழக்கில் கைது செய்துள்ளதாகவும் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
மேலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த வழக்கை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, மணல் கடத்தல் குற்றம் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
அவர்களை நீண்ட தூரத்தில் உள்ள இடங்களுக்கு பணி மாற்றம் செய்ய வேண்டும் அறிவுறுத்திய நீதிபதி, மணல் கடத்தலில் சின்னதம்பி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு உள்ள தொடர்பு குறித்து விரிவான பதில் அளிக்கும்படி அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டார்.