பெரியார் மண்ணில் ஆன்மீக அரசியல் சபாஷ் என்று ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தனது அரசியல் பிரவேசம் குறித்து உறுதி செய்த நடிகர் ரஜினிகாந்த் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் சமயத்தில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது அரசியல் அறிவிப்பின் போது, ‘வெளிப்படையான ஜாதி, மத பேதமற்ற ஆன்மீக அரசியல்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பெரும்பாலானோர் ‘ஆன்மீக அரசியல்’ குறித்த அறிவிப்பை கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ”இது பெரியார் மண், பிள்ளையாரை உடைத்த மண், ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்ட மண், அடியே மீனாக்ஷி உனக்கு எதற்கு வைர மூக்குத்தி, கழட்டடி கள்ளி என்ற மண், தில்லை நடராஜனையும், திருவரங்க நாதனையும் பீரங்கி வாயில் வைத்து பிளக்கும் நாள் பொன்னாள் என்ற மண். ஆனால் இங்கு ஆன்மீக அரசியல் சபாஷ்” என தெரிவித்துள்ளார்.