நடிகர் ரஜினிகாந்த், டிசம்பர் 31ஆம் தேதி ரசிகர்கள் முன்னிலையில் தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார். அப்போது பேசிய ரஜினி, “நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். தனிக்கட்சித் தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதியிலும் போட்டியிடுவேன்” என்று அறிவித்தார்.
இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று அடுத்தக் கட்ட அறிவிப்பை ரஜினி வெளியிட்டுள்ளார். அதாவது, “www.rajinimandram.org” என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதில் விருப்பமுள்ள உறுப்பினர்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என இன்று ரஜினி அறிவித்துள்ளார்.
இது குறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் வீடியோவில், “வணக்கம்! அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். என்னுடைய அரசியல் பிரவேசத்தை வரவேற்ற அனைத்து மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு முக்கிய அறிவிப்பு. எனது பதிவு செய்யப்பட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களையும், பதிவு செய்யப்படாத மன்றத்தின் உறுப்பினர்களையும், மற்றும் தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் அப்பியென்று விரும்புகிற மக்களையும் ஒருங்கிணைத்து ஒரு குடைக்குள் கொண்டு வரவேண்டும்.
அதற்காக நான் rajinimandram.org என்ற வலைப் பக்கத்தை உருவாக்கி இருக்கிறேன். அதில், உங்களுடைய பெயர், வாக்களர் அட்டையையும் பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம். தமிழ்நாட்டில் ஒரு அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். வாழ்க தமிழக மக்கள். வளர்க தமிழகம்” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்த சமூக ஆர்வலர் ஒருவர், “ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் முயற்சிதான். பாஜக ஏற்கனவே மிஸ்டு கால் மூலம் உறுப்பினர் சேர்த்து வருகிறது. இவர் இணையத்தளம் மூலம் சேர்த்து வருகிறார்” என்றார்.