நாகர்கோவில், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் கர்ப்பிணி பெண் ஒருவர் உள்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா, கேரளா மாநிலங்களை தொடர்ந்து, தமிழகத்திலும் பன்றிக்காய்ச்சல் காலூன்றத் தொடங்கி வேகமாக பரவி வருகிறது. இந்தாண்டு மட்டும் அக்டோபர் 7ம் தேதி நிலவரப்படி, 232 பேர் பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குமரி மாவட்டம் நாகர்கோவில் சற்குணவீதி நர்சலேன் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை திரேசா ஜோசப்பின் ராணி (60), பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்ட்டில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஜோசப்பின் ராணி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல், அதே வார்டில் அஸ்வதி என்ற ஒரு வயது குழந்தை உள்பட இரண்டு பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கீழ் கூத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பஞ்சாபிகேசன் (32). இவரது, மனைவி சுகன்யா (27). இவர்களுக்கு, 3 வயதில் குழந்தை உற்றது.
9 மாத கர்ப்பிணியான சுகன்யாவுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் புதுச்சேரி ராஜீவ் காந்தி மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரத்தி மாதிரி பரிசோதனை செய்ததில், பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து, பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டில் சுகன்யா அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சுகன்யா நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.