அதிமுக தலைமையாகத்தில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலையை எடுத்து ஜெயலலிதாவின் வேறு உருவச்சிலை எந்த நேரமும் மாற்றப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு ஹைதராபாத்தில் செய்யப்பட்ட வெண்கலத்தால் ஆன முழு உருவ சிலையை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் திறந்து வைத்தனர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும்.
சிலையை பல தரப்பினர் விமர்சித்தனர், வெண்கலத்தால் செய்யப்பட்ட சிலை கொஞ்சமும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை போல் இல்லை என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
தற்போது அதற்கு ஒரு தீர்வாக, அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலையை மாற்றி புதிய சிலையை வைக்க முடிவு செய்துள்ளனர். ஓரிரு நாளில் இந்த புதிய சிலை மாற்றப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது 8 அடி உயரத்தில், சுமார் 800 கிலோ எடையில் உருவாகியுள்ள ஜெயலலிதாவின் சிலையை தயாரித்தவர் ஆந்திராவின் கிழக்கு கோதாவரியை சேர்ந்த சிற்பி ராஜ்குமார். சென்னை கொண்டுவரப்பட்ட ஜெயலலிதாவின் புதிய சிலைக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் சம்மதம் தெரிவித்துள்ளார். எந்த நேரமும் சிலை மாற்றி அமைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.