புத்தாண்டு கொண்டாட்டங்களில் களை இழந்தது சரக்கு விற்பனை.

இந்த ஆண்டு விற்பனையான பாட்டில்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால்,

by Isaivaani, Jan 3, 2018, 13:42 PM IST
இந்த ஆண்டு புத்தாண்டு தின கொண்டாட்டங்களின் மூலம், அரசுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் இல்லை என்றே சொல்லலாம், 
ஏனென்றால் வருடா வருடம் டாஸ்மாக் விற்பனை அதிகரித்துக்கொண்டே தான் போகுமே தவிர, ஒரு நாளும் வீழ்ச்சியடைந்ததாக வரலாறு இருக்காது.
ஆனால் இந்த ஆண்டு அதற்கு விதிவிலக்காகி போனது,
"குடி"மக்களின் இந்த திடீர் மாற்றம் அரசாங்கத்தின் அஸ்திவாரத்தை சிறிது ஆட்டம் காண வைத்துள்ளது.
 
 
டாஸ்மாக் கடைகள் மூலம் இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் 195 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இது, கடந்த ஆண்டை விட வெறும் 8 கோடி மட்டுமே அதிகம். விலையில் தான் அதிகமே தவிர விற்பனையில் குறைவுதான்.
டாஸ்மாக் அருகிலுள்ள பார்களை மூடியது, விலை ஏற்றம் போன்ற காரணங்களால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை குறைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடைகளிலும் தினசரி 2 லட்சம் முதல், 3 லட்சம் வரை விற்பனை நடைபெறும். ஆனால், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் அதிகமாக விற்பனையாகும்.
அதனால், ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும், டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். 
இந்நிலையில், இந்த ஆண்டு புத்தாண்டிற்கு 215 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
கடந்த வருடம் 3 சதவிகித கமிஷன் தொகையை குறைக்க வேண்டும் என்று டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் அரசுக்கு வலியுறுத்தி வந்தனர். இதனால் அரசுக்கும், பார் உரிமையாளர்களுக்கும் இடையே இழுபறி நிலை நீடித்து வந்தது. டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் அமைச்சரிடமும், அதிகாரிகளிடமும் பலமுறை முறையிட்டும் கமிஷன் தொகையை குறைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் ஏலம் எடுப்பதை தொடர்ந்து புறக்கணித்து வந்தனர். இதனால், இந்த ஆண்டு புத்தாண்டின் போது டாஸ்மாக் நிர்வாகம் வைத்த இலக்கை அடைய முடியாத நிலை ஏற்பட்டது. 
கடந்த 2016 டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு வரை 105 கோடிக்குக்கும்,
அடுத்த நாள் 2017 ஜனவரி 1 புத்தாண்டு அன்று மட்டும் 82 கோடிக்கும் மது விற்பனையானது, மொத்தமாக கடந்த ஆண்டு புத்தாண்டிற்கு மட்டும் 187 கோடிக்கு மதுபானம் விற்பனையானது.
 அதுபோல், 2017 டிசம்பர் 31 அன்று 117 கோடிக்கும், அடுத்த நாள் 2018 ஜனவரி 1ம் தேதி 78 கோடிக்கும் மது விற்பனையானது,
மொத்தமாக, இந்த ஆண்டு புத்தாண்டிற்கு மட்டும் 195 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது.
 இது கடந்தாண்டை காட்டிலும் வெறும் 8 கோடி மட்டுமே அதிகம். இதனால், டாஸ்மாக் நிறுவனம் சார்பில் இந்த ஆண்டு புத்தாண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட 215 கோடியை எட்ட முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு, மதுபானம் பாட்டில் ஒன்றுக்கு 10 சதவிகிதம் விலை அதிகரித்துள்ளது, இந்த ஆண்டு விற்பனையான பாட்டில்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை குறைந்துள்ளது உறுதியாகிறது,
விலை உயர்வு தான் மதுபானம் விற்பனை குறைவுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு இலக்கை அடைய முடியவில்லை என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரே நிரந்தர வருமானமும், இப்படி தள்ளாடிக் கொண்டே போனால், விரைவில் அரசின் நிலை கேள்விக்குறியாகி விடும் என்றும், அரசு எந்திரம் தன்னை சுயப்பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என்றும், மீண்டும் பழைய விலைக்கு விற்பனையாகும் வரை, தான் இனி சொந்த காசில் வாங்கி குடிப்பது இல்லை என்றும், 'சத்தியம் செய்து' ரோட்டில் படுத்து உருண்டு கொண்டிருந்த ஒரு "குடி"மகனின் கலகக் குரல், நாட்டுக்கு ஏதோ கருத்து சொல்வதாகவே தோன்றியது.

You'r reading புத்தாண்டு கொண்டாட்டங்களில் களை இழந்தது சரக்கு விற்பனை. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை