தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கடந்த 10 நாட்களுக்கு முன்பு எரிந்த நிலையில் ஒரு பெண் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். கொலை செய்யப்பட்ட பெண் யார் என கடந்த 10 நாட்களாக விசாரித்து வந்தனர். தீவிர விசாரணையில், எரித்துக் கொல்லப்பட்ட பெண் பெங்களூரு காரப்பாளையம் பகுதியைச் சார்ந்த துர்கா தேவி என்பது தெரியவந்தது.
பாலக்கோடு அருந்ததியர் காலனியை சேர்ந்த மூர்த்திக்கும், துர்காதேவிக்கும் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மூர்த்தி பெங்களூரில் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வந்துள்ளார். அங்கு ஏற்பட்ட பழக்கத்தால் துர்கா தேவியை திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் துர்காதேவிக்கு நாகமச்சம் இருப்பதாகவும், அதன் காரணமாக மூர்த்தியின் குடும்பத்திற்கு முன்னேற்றம் ஏற்படாது என்றும் ஒரு ஜோசியர் மூர்த்திக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதனை நம்பிய மூர்த்தி அவரது நண்பர்கள் உதவியோடு துர்காதேவியின் முகத்தில் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்து சடலத்தின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். உதவி செய்த நண்பர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் தருவதாக பேசி முன்பணமாக 30 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.
இச்சம்பவத்தை கண்டுபிடித்த பாலக்கோடு போலீசார் மூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் சகீல், அம்ருதீன், சாதிக் பாஷா உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனங்கள், 5 செல்போன்கள், கொலையான துர்கா தேவிக்கு சொந்தமான 4 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்றால் நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெற்று பிரிந்து செல்லலாம். அதை விடுத்து ஜோதிடரின் பேச்சைக் கேட்டு செயல்பட்டால் விபரீத நிலையே ஏற்படும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நம்பிக்கை வளர்ந்த நெஞ்சில் பகுத்தறிவு தோன்றும். அந்தப் பகுத்தறிவு நமது எதிர்காலத்தை வளம் உடையதாக ஆக்கும் பச்சை விளக்கு. அந்த விளக்கின் துணையுடன் பகுத்தறிவுச் சமுதாயத்தைப் படைக்கக் கருதியுள்ளார் பாரதிதாசன்.
பச்சை விளக்காகும் - உன்
பகுத்தறிவு தம்பி!
பச்சை விளக்காலே - நல்ல
பாதைபிடி தம்பி
என்று இளைஞர்களுக்கு வழிகாட்டியுள்ளார் பாரதிதாசன் கவிதைகள். ஆனால் இன்றும் மூடநம்பிக்கைகள் தொடந்துகொண்டுதான் இருக்கிறது என்பது வேதனையான விஷயம்.