குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் தயா பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலம், பீஸ் பார் சில்ட்ரன் என்ற இயக்கத்தையும் செயல்படுத்தி வருகிறார். இந்த இயக்கத்தின் மூலம், காணாமல் போன குழந்தைகள் முதல், குற்றச்சம்பவங்களால் பாதிக்கப்படும் குழந்தைகள் வரை பாதுகாக்கும் இயக்கமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், லதா ரஜினிகாந்த் வரும் நவம்பர் மாதம் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை சென்னையில் குழந்தைகளுக்கான பல்நோக்கு நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறார்.
இதுகுறித்து லதா ரஜினிகாந்த கூறியதாவது: பீஸ் பார் சில்டிரன் இயக்கத்தின் மூலம், கடத்தப்பட்ட, கைவிடப்பட்ட குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களை பெற்றோரிடம் ஒப்படைப்போம். இல்லையென்றால் அந்த குழந்தைகளை நாங்களே வளர்ப்போம்.
இதற்காக, நாடு முழுவதும் பொது மக்கள் பங்கேற்கும் வகையில் பெரிய தளம் ஒன்றை உருவாக்கி வருகிறோம். மேலும், காணாமல் போன குழந்தைகள் பற்றிய சர்வே ஒன்றையும் எடுத்து வருகிறோம்.
ஒவ்வொருவரும் இதில் இணைந்து தங்கள் பகுதியில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை, துன்புறுத்தல் நடந்தாலோ, காணாமல் போனாலோ, கடத்தப்பட்டாலோ எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், குழந்தைகளை பாதுகாக்கவும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள் பாகாப்புக்கு இன்னும் அதிகமான சட்டங்களை இயற்ற வேண்டும் என்றார்.