சென்னைக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் நோட்டுக்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி ஒன்று திடீரென பழுதாகி சாலையில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவிலிருந்து சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை ஏற்றிக்கொண்டு சென்னை ரிசர்வ் வங்கிக்கு கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. நேற்று நள்ளிரவில், அமைந்தகரை பகுதியில் வந்தபோது லாரி திடீரென பழுதாகி நின்றது. சோதனையில் கியர் பாக்சில் பழுது ஏற்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த பொதுமக்கள் அங்கு ஆர்வமுடன் திரண்டனர்.
இதையடுத்து மெக்கானிக்குகள் வரவழைக்கப்பட்டு, காவல் துறையினர் உதவியுடன் நள்ளிரவில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றன. லாரிக்கு பாதுகாப்பாக வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பணம் இருந்த கண்டெய்னரை யாரும் நெருங்காமல் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பின்னர் மீட்பு வாகனம் வரவைக்கப்பட்டு கன்டெய்னர் லாரி ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அமைந்தகரை பகுதியில் சுமார் ஒருமணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.