குரூப்-4 தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட 31 425 பேர் தங்களது நிலையை தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழக அரசுப் பணிகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி வெளியிடப்பட்டது.
9 ஆயிரத்து 351 பேரை பணி நியமனம் செய்வதற்காக சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 31,425 பேர் தகுதி பெற்றிருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்தது. இதையடுத்து, அவர்கள், தங்களுடைய சான்றிதழ்களை, தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தற்போது, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யப்பட்டதன் நிலையை, தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் எனவும், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாதவர்களின் பெயர் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
சான்றிதழ் சரிபார்த்தலுக்குப்பின், கலந்தாய்வுக்கு தகுதி வாய்ந்தவர்கள் பெயர் பட்டியல் விரைவில் தனியாக வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.