சபரிமலை விவகாரத்தில் கேரள அரசை கவிழ்க்க பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சதி செய்வதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பைக் கண்டித்து கேரள மாநிலம் கண்ணூரில் பாஜக சார்பில் பேரணி நடந்தது. இதில் கலந்து கொண்ட பேசிய பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, இடதுசாரி அரசை எச்சரிக்கிறோம். ஒரு விசுவாசமற்ற அரசாங்கம் ஒரு தீர்ப்பின் பெயரில் மோசமான வேலைகளை செய்ய முயற்சிக்கிறது"
"அய்யப்ப பக்தர்களை கேரள அரசு அவமதித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை காட்டி வன்முறையை உருவாக்க முயல வேண்டாம். ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்க கூடாது. பக்தர்களோடும் அவர்களது நம்பிக்கையோடும் பாஜக துணை நிற்கும்" என கடுமையாக சாடி பேசினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், "இடதுசாரி அரசாங்கத்தை கவிழ்க்க அமித்ஷா முயற்சிக்கிறார். இந்த அரசாங்கம் பாஜகவின் கருணையால் வரவில்லை. மக்களின் கட்டளையால் இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்"
"சபரிமலை பிரச்சினை குறித்து அரசியலமைப்புக்கு எதிராகவும், மாநில உரிமைக்கு எதிராகவும் கண்ணூரில் அமித்ஷா பேசியது கண்டிக்கத்தக்கது. உள்நோக்கத்துடன் மாநில அடிப்படை உரிமையில் தலையிடுவது சரியல்ல. ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் செயல்பாடுகள் அமைப்புகள் பாஜக அஜந்தாவை செயல்படுத்தி வருகிறது" என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.