மீ டூ இயக்கம் கடந்த ஒரு மாதமாக பல துறைகளில் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கர்நாடக இசையுலகை சேர்ந்த சில பெண்கள் தாங்கள் பாதிக்கப்பட்ட அனுபவங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தனர்.
இதன் எதிரொலியாக, சென்னை மியூஸிக் அகாடமி சில முக்கிய கர்நாடக இசைக்கலைஞர்களை தங்கள் இசை விழாவில் பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளது.
"மூ டூ இயக்கம் எழுச்சியடைந்துள்ளது. நடப்பதிலிருந்து நாங்கள் ஒதுங்கியிருக்க இயலாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்கள் ஆதரவை காட்ட விரும்புகிறோம்," என்று கூறியுள்ள மியூஸிக் அகாடமி தலைவர் என். முரளி, பாலியல் குற்றச்சாட்டு காரணமாக ஏழு கலைஞர்களை இந்த ஆண்டு மார்கழி இசை விழாவில் பயன்படுத்தப்போவதில்லை என்ற அறிவித்துள்ளார்.
குரலிசை கலைஞர்கள் என். ரவி கிரண், ஓ.எஸ். தியாகராஜன், மிருதங்க வித்துவான்கள் மன்னார்குடி ஏ.ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜா ராவ், திருவாரூர் வைத்தியநாதன், வயலின் கலைஞர் நாகை ஸ்ரீராம் மற்றும் இசைக்கலைஞர் ஆர். ரமேஷ் ஆகியோர் இந்த ஆண்டு டிசம்பர் விழாவில் பங்கேற்க மாட்டார்கள் என்ற கூறப்படுகிறது.
"குற்றச்சாட்டு கூறப்படுவது மட்டுமே ஓர் இசைக்கலைஞரை தடை செய்வதற்கு போதுமானது அல்ல. நடுநிலையாளர்களிடம் விவாதித்தே இந்த முடிவை எடுத்துள்ளோம். இது இந்த விழாக்காலத்திற்கு மட்டுமே பொருந்தும்.
எதிர்காலத்தில் இது குறித்து என்ன நிலை எடுப்பது என்று இன்னும் முடிவு எட்டப்படவில்லை," என்று தெரிவித்துள்ள என்.முரளி, தொடர்புடைய கலைஞர்களுக்கு அகாடமியின் முடிவு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.