போனஸ் வழங்க வலியுறுத்தி தீபாவளி அன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு முதல், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஒவ்வொரு தீபாவளி பண்டிகை அன்று போனஸ் தொகை கேட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடப்பாண்டிலும், 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்றும் தங்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் வரும் 5ம் தேதியும், தீபாவளி நாளான மறுநாளும் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடபோவதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ஆம்புலன்ஸ் சேவை பொது மக்களுக்கு அத்தியாவசியமானது. தீபாவளி அன்று வெடிவிபத்து ஏற்படும்போது, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் சேவை தேவை. னுனவே, இவர்களது வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நீதிபதிகளான எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை இறுதியில், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.