சென்னை: பேருந்து ஸ்டிரைக்கை தொடர்ந்து, தற்காலிக ஊழியர்களை கொண்டு பேருந்தை இயக்க முதல்வர் எடுத்திருக்கும் முடிவுக்கு வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பணிமனைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து, திமுக உள்ளிட்ட முக்கிய போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அனைத்து அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஓட்டுனர்களும், கன்டக்டர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், ஓட்டுவதற்கு ஓட்டுனர் இல்லாமல் பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால், தினக்கூலி அடிப்படையில், தற்காலிக ஓட்டுனர், கண்டக்டர்களை நியமித்து பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டிருந்தது. மேலும், தற்காலிக ஊழியர்களை நியமிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதனால், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தற்காலிக ஓட்டுனர்கள் பேருந்துகளை இயக்குவதற்கும், அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை தலைமை பணிமனையில் போக்குவரத்து ஊழியர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதனால், போக்குவரத்து ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல், அனைத்து பணிமனைகளிலும் தற்காலிக ஓட்டுனர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.