ஓம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தததை அடுத்து, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், வெளியூர்களுக்கு செல்லும் மக்கள் தங்களது பயணத்தை தொடங்கிவிட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் கோயம்பேடு உள்பட முக்கிய பேருந்து நிலையங்களில் மக்களின் கூட்டம அலைமோதி வருகிறது.
தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால், சென்னையில் முக்கிய சாலைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார்.
இதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் இதுவரை சிறப்பு பேருந்துகள் மூலம் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். 6 லட்சம் மக்கள் பயணம் செய்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. பயணிகள் சிரமம் இல்லாமல் பயணம் செய்ய அனைத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு நெருக்கடி குறைவாக உள்ளது. விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் மக்களுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஓம்னி பேருந்துகளில் பயணிகளிடம் இருந்து அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில், சுமார் 10 ஓம்னி பேருந்துகளில் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் திருப்பி வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.