சென்னையில் குற்றச்சம்பவங்களில் சிக்கும் பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு உதவும் வகையில் போலீசார் சாவலன் என்ற ஆப்பை அறிமுகம் செய்துள்ளனர்.
சென்னையில் தொடர்செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் பெண்களும், முதியோர்களும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் உடனே போலீசை தொடர்புக் கொள்ளும் வகையில் கோர மாநகர காவல் துறை சார்பில் காவலன் எஸ்ஓஎஸ் என்ற ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆப்பை ஆன்டிராய்டு மற்றும் ஐபோனில் பதிவேற்றம் செய்து, அவசரக் காலத்தில் காவல் துறையை அழைக்கலாம். காவலன் எஸ்ஓஎஸ் ஆப்பில் உள்ள பொத்தானை அழுத்தினால், அழைப்பவரின் இருப்பிடம் ஜிபிஎஸ் மூலம் அறியப்படும். அழைப்பவரை உடனடியாக அவர்களின் செல்போன் கேமரா தானாகவே 15 வினாடிகளில் ஒலி&ஒளியுடன் கூடிய வீடியோ எடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிவிடும்.
காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அழைத்த நபரை அழைக்கவும் முடியும். அழைத்தவரை கண்காணிக்கும் வசதியும் இந்த ஆப்பில் இடம்பெற்றுள்ளது. அழைப்பவரின் இருப்பிட தகவல் மற்றும் வரைப்படம் இந்த ஆப்பில் பதிவு செய்துள்ளவர்களின் எண்களுக்கு தானாகவே பகிரப்படும்.
ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயங்கும் வசதி உள்ள இந்த ஆப் டேட்டா வசதி இல்லாத இடங்களிலும் கூட தானியங்கி எச்சரிக்கை மூலமாக செயல்படும். 24 மணி நேரமும் செயல்படும் இந்த ஆப் பெண்கள், முதியவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
இந்த ஆப் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காவலன் எஸ்ஓஎஸ் ஆப்பின் முழு விவரம் அடங்கிய 50 ஆயிரம் துண்டு பிரசுரம் சென்னை முழுவதும் போலீசாரால் வழங்கப்பட்டது.