அடுத்த ரவுண்டுக்கு ரெடியா? தென் தமிழக மக்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்!

South tamilnadu may get heavy rain in nov 8-10 says tamilNadu Weatherman

by Kani Selvan, Nov 7, 2018, 15:48 PM IST

இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி இருப்பதால், தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலான மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன்,

இலங்கைக்கு அருகே தற்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலிமையானதாக இல்லை என்பதால் அதிகமான காற்றோ அல்லது கடலில் உயரமான அலைகளோ உருவாகும் என்று எதிர்பார்க்க முடியாது.

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 10-ம் தேதிக்குள் வலுவிழுந்துவிட வாய்ப்புள்ளதால், புயல் உருவாவதற்கான வாய்ப்பில்லை, இருப்பினும், குறைந்த காற்றழத்த தாழ்வுப்பகுதியால், அடுத்த 3 நாட்களுக்கு ( 9-ம்தேதி ) வரை தென் மாவட்டங்களிலும், 8-ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

8-ம்தேதி புதுச்சேரி முதல் கன்னியாகுமரி வரை பரவலாக மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவாரூர், நாகை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 8-ம் தேதி கனமழை பெய்யும்.

அருகே உள்ள மற்ற மாவட்டங்களான புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களிலும் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவர்களின் கவனத்திற்கு:

இலங்கைக்கு அருகே உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் அச்சமடைய வேண்டாம்.

இது மிக, மிக, வலுவிழந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி. அந்தமான் நிகோகர் தீவுப்பகுதிக்கு அருகே அடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி நகர்ந்து வருவதால், 10-ம் தேதியில் இருந்து கடல் மிகுந்த கொந்தளிப்புடன் இருக்கும். இதனால் தமிழக வங்கக்கடல் பகுதிக்குள் மீனவர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்.  

சென்னையில் எப்படி?

சென்னையைப் பொறுத்தவரை ஒரு வாரத்துக்கு வறண்ட வானிலையே காணப்படும். அவ்வப்போது நகரின் ஏதாவது ஒரு பகுதியில் மழையை எதிர்பார்க்கலாம். இந்த வடகிழக்குப் பருவமழையில் அவ்வப்போது திடீர் மழை பெய்வதுதான் இயல்பு.

8-ம் தேதி பெய்யும் மழை புதுச்சேரி முதல் கன்னியாகுமரிவரை பரவலாக இருக்கும். இதன் ஒரு பகுதியாக, சென்னையிலும் மழையை எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

You'r reading அடுத்த ரவுண்டுக்கு ரெடியா? தென் தமிழக மக்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை