சர்ச்சைக்குரிய சர்கார் திரைப்பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவம்பர் 27 வரை கைது செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக அரசையும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும் மிகக் கடுமையாக விமர்சித்து வெளியானது சர்கார் திரைப்படம். நடிகர் விஜய் நடித்துள்ள இத்திரைப்படத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்தது. இதனிடையே இயக்குநர் முருகதாஸ் வீட்டுக்கு நள்ளிரவில் போலீசார் சென்றதால் அவர் கைது செய்யப்படப் போகிறார் என்கிற தகவலை பரப்பியது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
ஆனால் முருகதாஸுக்கு பாதுகாப்பு அளிக்கவே சென்றதாக போலீஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகதாஸ் தம்மை போலீஸ் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீது பிற்பகலில் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையைத் தொடர்ந்து நவம்பர் 27-ந் தேதி வரை முருகதாஸை கைது செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.