இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு- ஸ்டாலின் கடும் கண்டனம்

இலங்கை நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனாவால் பிரதமராக நியமிக்கப்பட்டவர் மகிந்த ராஜபக்சே. ஆனால் அவருக்கு பெரும்பான்மை எம்.பி.க்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை.

சிறிசேனாவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கேவுக்கே பெரும்பான்மை எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் மகிந்த ராஜபக்சே நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கும் நிலை இருந்து வந்தது.

இதையடுத்து இலங்கை நாடாளுமன்றத்தை திடீரென நள்ளிரவில் மைத்திரிபால சிறிசேனா கலைத்து உத்தரவிட்டார். இது இலங்கை மற்றும் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மைத்திரிபால சிறிசேனாவின் நடவடிக்கைக்கு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன. இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், மைத்திரிபால சிறிசேனாவின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது.

இலங்கையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த ஜனநாயகப் படுகொலைக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இலங்கையில் ஈழத் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


மு.க. ஸ்டாலின் அறிக்கை:

மூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, தேர்தல் நடைபெற்ற நான்கரை வருடங்களுக்குள் இலங்கை பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும்” என்று இலங்கை அரசியல் சட்டம் மிகத் தெளிவாக வரையறுத்துள்ள நிலையில், அந்த அரசியல் சட்டத்தினைக் காலில் போட்டு மிதித்து, அதன் மீது ஏறி நின்று, சிறிதும் மனசாட்சியின்றி, பாராளுமன்றத்தைக் கலைத்துள்ள அதிபர் சிறிசேனாவின் அராஜகம் பேரதிர்ச்சியளிக்கிறது. மிக மோசமான அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி - அதன் மூலம் இலங்கையில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழர்களின் நலனுக்கும், பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியிருக்கிறார்.

கடந்த அக்டோபர் 26ஆம் தேதி தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக, இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை மாற்றி, வருகின்ற 14ஆம் தேதி புதிய பிரதமர் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிந்ததும், தமிழ் மக்களின் குரல் ஒலிக்கும் பாராளுமன்றத்தைக் கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை மட்டுமல்ல - அதிபரின் அரசியல் சட்ட அத்துமீறல்! தமிழர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த அக்கிரமத்தை ஏதோ “அண்டை நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள்” என்று ஒதுக்கி வைத்து விட முடியாது என்றாலும், பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு துவக்கத்திலிருந்தே இந்த ஜனநாயக விரோத செயல்களை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அதை விடக் கவலையளிக்கிறது.

முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும், அவர்களின் உரிமைகளை அடியோடு நசுக்குவதிலும், இனப்படுகொலை - மனித உரிமை மீறல்கள் - சர்வதேச நெறிகளுக்கு எதிரான போர்க்குற்றங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவதிலும், தனது ஆட்சிக் காலம் முழுவதும் கங்கணம் கட்டிக் கொண்டு “ஹிட்லர்” போல் செயல்பட்ட ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்ட போது மத்திய அரசு அமைதி காத்தது. ஈழத்தமிழர்கள் கண்ணியமாகவும், சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ - “இந்திய - இலங்கை” ஒப்பந்தப்படி கொண்டு வரப்பட்ட இலங்கை அரசமைப்புச்சட்டத்தின் “13 ஆவது திருத்தத்தையும்” தாண்டி அதிக அதிகாரங்களை ஈழத்தமிழர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை எள்ளி நகையாடிய ராஜபக்சேவும் - அதிபர் சிறிசேனாவும் கைகோர்த்து கூட்டணி அமைத்து ஜனநாயகத்தின் குரல்வளை மீது நின்று ஆட்டம் போட்டதை, 14 நாட்களுக்கு மேல் வேடிக்கை பார்த்தது மத்திய பாஜக அரசு.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக “பலாத்காரத்தையும்” “படுகொலையையும்” கட்டவிழ்த்து விட்டு, இந்திய அரசின் எச்சரிக்கையையும் மீறி அப்பாவித் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த போர் மோசடிகளுக்காக, சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட்டு கடுந்தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ராஜபக்சே, திட்டமிட்டு இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை செயற்கையாக உருவாக்கியதையும் கண்டு கொள்ளாமல் மத்திய பா.ஜ.க. அரசு கண் மூடிக் கொண்டிருந்தது. மத்திய அரசின் மவுனம் இன்றைக்கு இலங்கை பாராளுமன்றக் கலைப்பில் முடிந்து விட்டது.

தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக இலங்கை அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள உருவாக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை பணிகளும் தடை பட்டு விட்டது. அதுமட்டுமின்றி தமிழர்கள் மீது திடீர் தேர்தலை, சிறிசேனா - ராஜபக்சே” சூழ்ச்சிக் கூட்டணி திணித்திருப்பதற்குக் காரணமாக அமைந்து விட்டது. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நடந்துள்ள மிகப்பெரிய அநியாயத்தை பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு கண்டும் காணாமலும் தட்டிக் கேட்காமலும் இருந்ததையும், தங்களின் உயிருக்கும், உரிமைகளுக்கும் ஆபத்து உருவாகிய நேரத்தில் கூட இந்திய அரசு இப்படி இனம் புரியாத மவுனம் காத்ததையும் பார்த்து ஈழத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் - ஏன் உலகத்தமிழர்களும் இன்றைக்கு அதிர்ச்சியுடன் உறைந்து போயிருக்கிறார்கள்.

ஆகவே, விபரீத சூழல் இலங்கையில் உருவாகி, அரசியல் நெருக்கடியும், ஸ்திரத்தன்மையும் ஆபத்திற்குள்ளாகி இருக்கும் இந்த நேரத்தில், அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு இருக்கிறது என்பதை பிரதமர் திரு நரேந்திரமோடி தாமதமாகவேனும் உணர வேண்டும் என்றும், இலங்கையில் பட்டப்பகலில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த ஜனநாயகப் பச்சைப் படுகொலைக்கு, இந்திய அரசு உடனடியாகக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இலங்கையில் ஈழத்தமிழர்கள் அமைதியாக, பாதுகாப்பாக, கண்ணியத்துடன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
Tag Clouds