கஜா புயல் அடுத்த 6 மணிநேரத்தில் தீவிர புயலாக மாறும்; கடலூர்- பாம்பன் இடையே இன்று மாலை அல்லது இரவு இப்புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இப்புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டது.
கடந்த 3 நாட்களாக கடலில் நகர்ந்து கொண்டிருந்த இப்புயல் தற்போது சென்னை மற்றும் நாகைக்கு 370 கி.மீ தொலைவில் உள்ளது. மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த கஜா புயல் தற்போது 14 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இப்புயல் அடுத்த 6 மணிநேரத்தில் தீவிர புயலாக மாறும் என்றும் இன்று மாலை அல்லது இரவு நாகை- பாம்பன் இடையே கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் கரையை நெருங்கும் நிலையில் சென்னையின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. கடலூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.