லோக்சபா தேர்தலுக்கு மிகப் பெரிய கூட்டணியை உருவாக்குவோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். லோக்சபா தேர்தலில் மிக வலிமையான கூட்டணியை உருவாக்குவோம்.
திமுக மிகப் பெரிய கூட்டணியை உருவாக்கிவிட்டதைப் போல ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். காங்கிரஸ் ஏற்கனவே திமுகவுடன்தான் இருக்கிறது.
இதர சிறு சிறு கட்சிகள் காத்திருக்கிறார்கள். யெச்சூரி போன்றவர்கள் மக்கள் நலக் கூட்டணியாக இருந்து என்ன தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்பது நமக்கு தெரியும். அதனால் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
இன்றைய கால கட்டத்தில் பாஜக பலம் பொருந்திய, தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறது. நிச்சயம் பாஜக மிகப் பெரிய கூட்டணியை அமைக்கும். உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல்கள் அனைத்தையும் எதிர்கொள்வோம்.
சில புதிய அரசியல்வாதிகள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவோம் என கூறிக் கொண்டிருக்கிறார்கள். பல பேர் ஒன்று சேர்ந்து எதிர்ப்பதால் மோடி பலசாலி என்று ரஜினிகாந்த் சொன்னால், பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பதால் பாம்பு பலசாலியா? என கேட்கிறார் திருமாவளவன்.
இப்படி தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவாக கருத்து கூறினால் அவர்களை பாய்ந்து போய் தாக்குவது அதிகரித்து வருகிறது.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.