கூட்டணிகளே இல்லாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறார் பா.ஜ.க தமிழக தலைவர் டாக்டர்.தமிழிசை. ' என்னை எப்படியாவது இந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என எதிரிகள் நினைக்கிறார்கள். அவர்களுக்காக எம்.பி தேர்தலில் நான்தான் சீட் கொடுக்கப் போகிறேன்' என நக்கலடித்திருக்கிறார்.
தமிழக பா.ஜ.க உயிர்ப்போடு இருப்பதற்குக் காரணம், தமிழிசை தினம்தோறும் அளிக்கும் பேட்டிகள்தான். அதனால்தான், அவரை அந்தப் பதவியில் இருந்து தூக்காமல் வைத்திருக்கின்றனர்.
தவிர, பொன்.ராதாகிருஷ்ணனை அத்வானியின் ஸ்லீப்பர் செல்லாகப் பார்க்கிறார் மோடி. அதனால்தான் மீண்டும் தலைவர் பதவி அவர் கைகளுக்குப் போகாமல் இருக்கிறது.
இந்தநிலையில், வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் நல்லபடியாக கூட்டணி அமைய வேண்டும் என நினைக்கிறார் தமிழிசை. அதன்மூலம், தன்னுடைய தலைமை செல்வாக்கானதாக மாறும் என நம்புகிறார்.
கருணாநிதி மறைந்த நேரத்தில், நினைவிடம் உள்பட பல விஷயங்களில் தி.மு.கவுக்குச் சாதகமாக மத்திய அரசு செயல்பட்டது. இதை வைத்துக் கொண்டு கூட்டணிக்குள் தி.மு.கவை இழுக்க பலமுறை முயன்றார் தமிழிசை.
'தலைவர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் தூது விடுகிறார் டாக்டர்' எனக் கட்சி நிர்வாகிகளிடம் கிண்டலடித்தார் ஸ்டாலின். இதையெல்லாம் ஒரு பொருட்டாக தமிழிசை எடுத்துக் கொள்ளவில்லை.
இப்போதும், தி.மு.கவைப் பிரதான கட்சியாகப் பார்க்கிறது பிஜேபி. தமிழகத்தில் காங்கிரஸோடு தி.மு.க சேராமல் இருந்தாலே போதுமானது என்பதுதான் அமித் ஷாவின் ஒரே நோக்கம்.
அதற்காகப் பலவிதங்களில் தி.மு.கவை வளைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இப்போது கடைசி கட்டமாக, ' 20 தொகுதிகளில் தேர்தல் நடந்தால் உங்களுக்குத் தான் ஆபத்து. எங்கள் தேசிய தலைவரிடம் பேசுங்கள்' என தி.மு.க நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார் தமிழிசை.
இந்த 20 தொகுதிகளிலும் யார் அதிக இடங்களில் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே நாடாளுமன்றத் தேர்தலில் கதாநாயகர்களாக இருப்பார்கள். இதை உணர்ந்துதான் வேகம் காட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. 'ஆர்.கே.நகர் போல 20 தொகுதிகளிலும் மோசமான தோல்வி ஏற்பட்டுவிடக் கூடாது என தி.மு.க நினைத்தால் பா.ஜ.கவோடு அணி சேரட்டும்' எனப் பேசி வருகின்றனர் பிஜேபி நிர்வாகிகள்.
-அருள் திலீபன்