கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சூறையாடிய கஜா புயலால் கால்நடைகள் முதல் விவசாயிகள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவில் உயிர்சேதங்கள் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், கால்நடைகளுக்கும், விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர்செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர் செய்யும் நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் இருந்த 2,49,083 பேர் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 493 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. புயலின்போது 102 மாடுகளும், 633 ஆடுகளும் உயிரிழந்துள்ளன.
உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். புயல் காரணமாக 56,942 குடிசை வீடுகள் முழுமையாகவும் 30,404 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. 30,328 ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும். வாழை, தென்னை, நெல் மற்றும் இதர பயிர்கள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகி, விவசாய பெருமக்களுக்கு மிகுந்த பொருளாதார இழப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சேத விவரங்களை உடனடியாக கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும். புயல் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், திண்டுக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 1,70,454 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பல்வேறு மாவட்டங்களில் 347 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. சுமார் 39,938 மின் கம்பங்கள் விழுந்துள்ளன. 3,559 கி.மீ நீளமுள்ள மின் வயர்கள் சேதமடைந்துள்ளன.
சேதம் அடைந்த மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை சீர் செய்யும் வகையில் மரங்களை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை மாற்றியமைக்கும் பணிகளை மேற்கொள்ள 12,532 மின் துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கஜா புயல் காரணமாக மக்களுக்கு எந்தவித தொற்று நோயும் ஏற்படாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. சேதம் அடைந்த பகுதிகளை சீர்செய்யும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.