தமிழ் திரையுலகில் சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக்கின் 57வது பிறந்த நாள் இன்று.
காமெடியில் கருத்தை சொல்ல முடியும் என்று உலகிற்கு எடுத்துக் காட்டியவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், பல ஆண்டுகளுக்கு பிறகு காமெடியில் மீண்டும் கருத்துகளை வெளிப்படுத்திய விவேக்கிற்கு சின்ன கலைவாணர் என்ற பட்டம் கிடைத்தது.
1961ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி சங்கரன் கோவிலில் பிறந்த விவேகானந்தன், இயக்குநர் இமயம் பாலசந்திரன் அவர்களால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர். ஆரம்பத்தில் கதா நாயகனாக சில படங்களில் நடித்த விவேக், பின்னர் ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்கள் படத்தில் காமெடியனாக வலம் வந்து தமிழ்நாட்டு மக்களை சிரிக்க வைத்தவர்.
கஜா புயலின் காரணமாக தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள அவர், அரசின் பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக ஊட்டி செல்வதாக தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பொன் மொழிகளில் பற்றுக் கொண்ட நடிகர் விவேக், இதுவரை லட்சக் கணக்கான மரக் கன்றுகளை நட்டு சமூகப் பணியும் ஆற்றி வருகிறார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள 63வது படத்தில் காமெடியனாக விவேக் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.