சென்னை எண்ணூர் துறைமுகத்தில் சரக்கு கப்பலில் இருந்து கசிந்த கச்சா எண்ணெய் அகற்றும் பணி இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியால், சம்பந்தப்பட்ட கப்பல் அங்கிருந்து புறப்படுவதற்கும் தடை விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேற்கு வளைகுடா நாடான மார்ஷல் தீவுக்கு சொந்தமான கோரல் ஸ்டார் என்ற கப்பல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 25,400 டன் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்னை எண்ணூர் துறைமுகத்திற்கு வந்தடைந்தது.
பின்னர், கப்பலில் இருந்து துறைமுகத்துக்கு இணைப்பு குழாய் மூலம் கச்சா எண்ணெய் அனுப்பும் பணி நடைபெற்றது. அப்போது, குழாயில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து, கச்சா எண்ணெய் சகிய தொடங்கியது. கசிவை கட்டுப்படுத்த முடியாததை அடுத்து, கச்சா எண்ணெய் கடலில் பரவியது. இதனால், அதிர்ச்சியடைந்த துறைமுக ஊழியர்கள் உடனடியாக கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், இதுகுறித்து மாசுகட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து, துறைமுகத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறிதது அதிகாரி கூறுகையில், சரக்கு கப்பலில் இருந்து சுமார் 2 டன் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
இதன் எதிரொலியாக, மேற்கு வளைகுடா நாட்டிற்கு சொந்தமான இந்த கப்பல் புறப்படுவதற்கும் தடை விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.