எந்த கொம்பனாக இருந்தாலும், இந்த இயக்கத்தை அவர்களால் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள், திமுகவின் கடைசி அத்தியாயம் தொடங்கி விட்டதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறாரே? எனறு கேட்டதற்கு, பதிலளித்த ஸ்டாலின், “திமுகவை அழிப்பதற்கோ, ஒழிப்பதற்கோ, அவர்கள் எப்படிப்பட்ட பதவிகளில், எந்த நிலையில் இருந்தாலும், எந்த கொம்பனாக இருந்தாலும், இந்த இயக்கத்தை அவர்களால் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது” என்றார்.
மேலும், நேற்று முதலமைச்சருடன் தொலைபேசியில் பேசிய பிறகு ஒருதலைப்பட்சமாக அறிக்கை வெளியிட்டு இருப்பதாக முதலமைச்சர் இப்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், “முதலமைச்சர் தன்னுடைய கருத்தை வெளியிட்டு இருக்கலாம். நான் அவரிடம், ’உடனடியாக போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்’ என்றபோது, அமைச்சர் தொடர்ந்து பேசி வருவதாக அவர் தெரிவித்தார்.
எனவே, “அமைச்சர்கள் பேசுவதை விட நீங்கள் அவர்களை அழைத்துப் பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும், ஏன் பேச மறுக்கிறீர்கள்”, என்ற கருத்தை வலியுறுத்தினேன். அதை மூடி மறைக்க வேண்டும் என்பதற்காக, ஒருவேளை முதலமைச்சர் இந்தக் கருத்தை தெரிவித்து இருக்கலாம். நான் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள எல்லா எதிர்க்கட்சிகளும் இதைத்தான் வலியுறுத்தி வருகிறார்கள். அதை உடனே அவர் செய்ய வேண்டும் என்பதுதான் எனது கருத்து” என்று தெரிவித்தார்.