கஜா புயலின் பாதிப்புகளை சீர்செய்வதற்காகப் பல்வேறு அமைப்புகள் களமிறங்கியுள்ளன. இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவும் தன்னுடைய அறக்கட்டளை மூலம் நிவாரண உதவிகளைத் திரட்டிக் கொண்டிருக்கிறார். ‘ டெல்டா பகுதியின் பசுமையை மீட்டெடுப்போம்’ எனக் களப் போராளிகளுக்கு அவர் அழைப்புவிடுத்திருக்கிறார்.
சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணபிரியா, கடந்த சில வருடங்களாக சமூக நலப்பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். கிருஷ்ணபிரியா ஃபவுண்டேஷன் என்ற பெயரில் அவரது அமைப்பு செயல்பட்டு வருகிறது.
சூழலியல், குழந்தைகள் நலன் உள்ளிட்ட கோரிக்கைகளை மையமாக வைத்து நற்பணிகளைச் செய்து வருகிறார். இடையில் அரசியல் தொடர்பான ஸ்டேட்மெண்டுகளை வெளியிட்டாலும், சுற்றுச்சூழல் என்றாலேயே அவருக்கு அலாதியான ஆர்வம் வந்துவிடும்.
கடந்த சில நாள்களாக கஜா புயலால் டெல்டா மாவட்டம் நிலைகுலைந்து நிற்பதை அதிர்ச்சியோடு கவனித்து வருகிறார். காவிரி டெல்டா மக்களின் துயரைத் துடைப்பதற்காக நிவாரணப் பொருள்களை சேகரிக்கும் வேலைகளைச் செய்து வருகிறார்.
இதுதொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள கிருஷ்ணபிரியா, ‘ சோழ நாடு சோறுடைத்து, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எனும் சொற்றொடர்களுக்கு உரித்தான, உலகின் பசியாற்றும் டெல்டா விவசாயிகளுக்கும் விவசாய தோழர்களுக்கும் மீனவர்களுக்கும் நன்றியோடு நம்மால் இயன்ற உதவியை செய்வோம். டெல்டாவை நோக்கி மெழுகுவர்த்திகள், 2000 கிலோ அரிசி, தார்ப்பாய்கள் போன்ற நிவாரண பொருட்களை எம்முடைய தன்னார்வலர்கள் இன்று கொண்டு செல்கின்றனர். எத்துயர் வரினும், மீண்டெழுந்து வரும் வல்லமை பெற்றவர் தமிழ் மக்கள். கரம் கோர்ப்போம், துயர் துடைப்போம்.
கஜா புயலால் இன்னுயிரை இழந்தோரின் குடும்பங்களுக்கும், தங்கள் உடமைகளை இழந்து வாடுவோருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆயிரக்கணக்கான மரங்களை இப்புயலால் இழந்திருக்கும் நிலையில், டெல்டா பகுதியின் பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஆர்வமுள்ள அமைப்புகள் இணைந்து செயல்படவேண்டியது அவசியம். விருப்பமுள்ள அமைப்புகள் எங்களை தொடர்பு கொள்ளவும்’ எனக் கூறியிருக்கிறார்.
அவரது இந்த அழைப்புக்கு ஏராளமான தன்னார்வலர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்காக தான் சேகரித்த நிவாரணப் பொருள்களையும் வெளியிட்டிருக்கிறார் கிருஷ்ணபிரியா.
- அருள் திலீபன்